Wednesday 20 July 2016

அறிவோம் இஸ்லாம்


ஹலால் -ஹராம்
மன அமைதியைப் பெறவும், உடல் நலத்தைப் பேணவும் மனிதனுக்கு இஸ்லாம் உன்னத நெறிகளை வகுத்துள்ளது. உடலும், உள்ளமும் தூய்மையாக இருக்க வேண்டும் என்று போதித்த இஸ்லாம், உண்பதிலும் தூய்மையானவற்றையே உண்ண வேண்டும் என்று வற்புறுத்துகிறது. 
'நம்பிக்கை கொண்டோர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்' (திருக்குர்ஆன் 2:172) என்று திருமறையில் இறைவன் கூறுகின்றான்.
மனித வாழ்வுக்கு முக்கிய தேவையானவை உணவு, உடை, உறைவிடம். இவற்றை நிறைவேற்ற வழிவகைகள் இருந்தாலும் அதைப் பெற வரைமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. கண்டவற்றை உண்டு வாழவும், கிடைத்தவற்றை அடைந்து மகிழவும் இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதி இல்லை. 
உணவு உண்பதில்கூட இஸ்லாம் சில வரையறைகளை வகுத்துள்ளது. அனுமதிக்கப்பட்டது 'ஹலால்' என்றும், தடை செய்யப்பட்டவை 'ஹராம்' என்றும் இஸ்லாம் கூறுகிறது. இதையே விதிக்கப்பட்டது 'ஹலால்' என்றும், விலக்கப்பட்டது 'ஹராம்' என்றும் சொல்லலாம்.
'செத்த பிராணியும், ரத்தமும், பன்றி இறைச்சியும் அல்லாஹ்வைத் தவிர மற்றவரின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையுமே உங்களுக்குத் தடுக்கப்பட்டவை ஆகும்' (திருக்குர்ஆன்-2:173) என்று திருமறை கூறுகிறது.
பன்றி இறைச்சியும், பன்றியில் இருந்து பெறப்படும் பொருட்களும் (பன்றியின் கொழுப்பு போன்றவை), இரையைக் கொல்வதற்காக நகம், பல் முதலியவற்றைப் பயன்படுத்துகின்ற விலங்குகள், பிற பிராணிகளைக் கூரிய நகத்தின் மூலம் கொன்று தின்னும் பறவைகள், ஊர்வன, புழு, செத்த பிராணிகள், முறைப்படி அறுக்கப்படாத பிராணிகள் மற்றும் பறவைகள் இன்னும் இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், எல்லாவிதமான ரத்தங்கள் இவை யாவும் மனிதனுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.
'விலங்குகளில் கோரைப்பற்கள் உள்ள ஒவ்வொன்றையும், பறவைகளில் கோரை நகங்கள் கொண்ட ஒவ்வொன்றையும் (உண்ணக் கூடாது என்று) நபிகளார் தடை செய்தார்கள்'. (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி).
கோரைப் பற்களால் கீறிக்கிழித்து பிராணிகளைத் தின்று வாழும் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, ஓநாய், குள்ள நரி போன்ற விலங்குகளின் மாமிசத்தை உண்பது மனிதர்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.  அவ்வாறே கோரை நகங்களைப் பயன்படுத்தி, பிற பிராணிகளைக் கொன்று தின்னும் கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பறவைகளின் மாமிசமும் தடை செய்யப்பட்டுள்ளது. 
இந்த விலங்குகளும், பறவைகளும் இயற்கையாகவே மனித இயல்புக்கு ஒவ்வாதவை ஆகும். இவற்றின் மாமிசத்தை உண்பதால், மனிதத்துக்கு எதிரான குணங்கள் மனிதனில் பிறக்க இடமுண்டு. தவிர அறிவியல் ரீதியாக இவற்றின் மாமிசம் நோய்களுக்குக் காரணமாகலாம். எனவே இவற்றை இஸ்லாம் தடை செய்துள்ளது. 
மனிதர்கள் இயற்கையாகவே செத்த பிராணியின் உணவை உண்பதை இழிவாகவே கருதுகிறார்கள். மேலும், ஆடு, மாடு போன்றவை உயிரோடு இருக்கும்போது அறுத்தால் மட்டுமே அதில் இருந்து ரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் ரத்தம் வெளிப்படாது. இதனால் அந்த மாமிசத்துடன் உறைந்துபோன ரத்தத்தையும் சாப்பிட வேண்டிய நிலை உள்ளது. ரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத கிருமிகள் இருக்கின்றன. அதனால்தான் ரத்தத்தை சாப்பிட இஸ்லாம் தடை விதித்துள்ளது. இந்த நிலையில் இறந்துபோன பிராணியின் இறைச்சியை உறைந்து போன ரத்தத்துடன் சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கப்படும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.    
பன்றியின் மாமிசம் தடை செய்யப்பட்டிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. எல்லா விலங்குகளுக்கும் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன. அந்தக் கால்நடைகளின் உடல் அதிகமாகச் சூடாகும்போது வியர்வை சுரந்து, உடல் சூட்டைத் தணிக்கிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட நீரும் இதன் மூலம் வெளியேறுகிறது. ஆனால் பன்றிக்கு வியர்வைச் சுரப்பிகள் கிடையாது. மனிதர்கள் சாதாரணமாக 110 டிகிரி வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் 29 டிகிரி வெப்பத்திற்கு மேல் பன்றிகளால் தாங்கிக் கொள்ள முடியாது. அதனால்தான் அவை எப்போதும் சாக்கடையில் புரண்டு வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்றன. எனவே பன்றியின் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுவதில்லை. 
பன்றியின் இறைச்சி உண்பதால் மனிதனுக்குப் பலவிதமான நோய்கள் உண்டாகின்றன. அந்த இறைச்சியில் மனிதனுக்குக் கேடு விளைவிக்கின்ற நாடாப்புழுக்கள் என்ற நுண்கிருமிகள் உள்ளன. உச்ச வெப்பத்திலும் இந்த புழுக்கள் சாவதில்லை. பன்றி இறைச்சியை உண்பதால் 60-க்கும் மேற்பட்ட நோய்கள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது. அதிலும் குறிப்பாக பன்றியின் சுவாசப் பையில் இருக்கும் 'எச் 1 என் 1' என்ற வைரஸ் கிருமிகள் 'ஆர்.என்.ஏ.' மூலக்கூற்றை அடிப்படையாகக் கொண்டு உருமாறி மனிதர்களைத் தொற்றக்கூடியவை. இதைப் 'பன்றிக்காய்ச்சல்' என்கிறோம். இது தொடுவதால் பரவும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் குழந்தைகள் முதியோர்களை எளிதில் தாக்கும். பலவித நோய்களின் உறைவிடமாகத் திகழ்கின்ற பன்றி இறைச்சியை உண்பதற்கு இஸ்லாம் தடை விதித்துள்ளது.
[ஹலால்(Halal) என்றால் என்ன ??
பொது மக்கள் சிந்தனையில் மிக நீண்ட நாட்களாக ஓடி கொண்டிருக்கும் கேள்வி இது ? பெரும்பாலான அசைவ உணவகங்களில் குறிப்பிட்டிருக்கும் 100 % (ஹலால்) - நம்மவர்கள் பெரும்பாலனவர்கள் நினைப்பது சுத்தம் என்றுதான் . அதன் உண்மை விளக்கம் தான் என்ன வாருங்கள் அலசுவோம் !!!
சுருக்கமாக ஹலால் என்பது கால்நடைகளை அறுக்கும் போது அதன் கழுத்து பகுதி முழுவதும் அறுபடாமல் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுபதால் ,அதன் வலியை உணர்த்தும் நரம்புகள் துண்டிக்க பட்டு வலியை உணராமல் இருக்க செய்வதே ஹலால் ஆகும் . இப்படி அறுக்கும் போது அதன் முழு ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல் தடுக்கப்படுகிறது. இதற்கு மற்றுமொரு காரணம் இறைவன் அனுமதிப்படி அறுப்பது என்பது பொருள்
                                                             
ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்:-
A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.
கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.
B.மேற்படி ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு – கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்.
இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் ?
அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் – இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் – இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு – இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.
D. கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே !
கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. ஹலால்முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.
E. . ஹலால் முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.
ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் – வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
F. ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நடைகள் வலியை உணர்வதில்லை.
இதன் முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது – கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் – உடலில் உள்ள சதைப்பாகங்கள் – இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் – துள்ளுவதாகவும் – துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.
இதை உண்மை படுத்தும் விதமாக ஹலால் முறையில் அறுக்க பட்ட உயிரினமும் ,வேறு விதமாக (தலை துண்டிக்கப்பட்டு ) அறுக்க பட்ட உயிரினமும் ,வேறு விதமாக (தலை துண்டிக்கப்பட்டு ) அறுக்க பட்ட உயிரினங்களை விட ஹலால் கால்நடைகள் மிக குறைந்த (painless dead ) வலியை உணர்வதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது ..]
ஹலாலைப் பேணுவோம்:
                                                                   

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்:
    " كَسْبُ الْحَلالِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ "

கடமையான வணக்கங்களுக்கு பிறகு ஆகுமான (ஹலாலான) வருமானத்தை தேடுவது கடமையாகும். (நூல்:பைஹகீ)
ஷத்தாது பின் அவ்ஸின் சகோதரி உம்மு அப்துல்லாஹ்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:ஒரு நாள் நபி(ஸல்)அவர்கள் நோன்பு  திறப்பதற்காக ஒரு கோப்பையில் ஆட்டுப்பாலை அவர்களிடம் கொடுத்து அனுப்பினேன்.ஏனெனில் அன்றைய தினம் பகலும் நீளம்,வெயிலும் அதிகம்.ஆனால் நபி(ஸல்)அவர்கள் அதை பெற்றுக்கொள்ளாமல் அந்த ஆடு எப்படி கிடைத்தது?என்று விளக்கம் கேட்டு என்னிடம் திருப்பி அனுப்பி விட்டார்கள்.பிறகு நான் "என்னுடைய சொந்த பொருளிலிருந்துதான் அதை வாங்கினேன் என்று சொல்லி அனுப்பியவுடன் அதை அருந்தினார்கள்.மறுநாள் அவர்களிடம் வந்து,நான் உங்களுக்கு பால் கொடுத்து அனுப்பியபோது,ஏன் விளக்கம் கேட்டு அனுப்பினீர்கள்?என்று நான் கேட்டபோது நபி(ஸல்)அவர்கள்:
இவ்வாறு தான் இறைத்தூதர்கள் கட்டளையிடப்பட்டுள்ளார்கள் என்று சொல்லி இவ்வசனத்தை ஓதிக் காட்டினார்கள்:
 يايها الرسل كلوا من الطيبات واعملوا صالحا إني بما تعملون عليم (என்னுடைய) தூதர்களே! நீங்கள் நல்லவற்றிலிருந்து உண்ணுங்கள்;நல்ல காரியத்தையும் செய்யுங்கள்;நிச்சியமாக நான் நீங்கள் செய்பவைகளை நன்கறிகிறவன்.(அல் குர்ஆன் 23:51)
இந்த வசனத்தில் "நற்செயல் புரியுங்கள்" என்பதற்கு முன்பாக "ஹலாலனவற்றை உண்ணுங்கள்"என்று இறைவன் சொல்வதற்கு காரணம்,ஹலாலவற்றை உண்பதின் மூலம்தான் நல்ல அமல்களுக்குரிய தவ்பீக் கிடைக்கும்.ஹராமான உணவால் நற்செயல் புரிவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போவதுடன் நற்காரியங்களும் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதால்தான் ஸஹாபாக்கள் தெரியாமல் சாப்பிட்ட உணவையும் கூட பேணுதலுக்காக வாந்தி எடுத்தார்கள்.
ஹஸன் (ரலி) அவர்கள் (சிறு குழந்தையாக இருக்கும் பொழுது)
ஸதகாவாக வந்த பேரீத்தம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டார்கள்.அதனைக் கண்ட நபியவர்கள்,சீ சீ,எனக்கூறி துப்பச் செய்து விட்டு,ஸதகாவின் பொருட்களை நாங்கள் சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா?என்றார்கள். (நூல்:புகாரி)
ஹராமான பொருளில் நின்றும் ஒரு பேரீத்தம் பழத்தைக்கூட தன் பேரன் உண்பதை நபியவர்கள் விரும்பவில்லை.
அந்நியர்கள் ஹலால் ஹராமை பேணமாட்டார்கள். அவர்களுக்கு இத்தகையோர் சட்டமும் இல்லை.ஆனால் நாம் ஒரு உணவை உண்ண வாங்குமுன் அது பற்றி பகுப்பாய்வு செய்ய வேண்டும்.இந்த உணவு எங்கிருந்து வருகிறது?எவற்றைக் கலப்படம் செய்து இது சமைக்கப்படுகிறது?இதில் ஹராம் கலந்துள்ளதா?என்பதையெல்லாம் நாம் அதை வாங்கு முன் கண்டறிய வேண்டும்.
காலை "பஜ்ர்"தொழுகைக்குப்பின் சற்று நேரம் "தஸ்பீஹ்,திக்ர்" செய்தப்பின்  "இஷ்ராக்" தொழுகையை நிறைவேற்றவேண்டும்:அப்பால் இறைவனிடம் தமது தேவைகளை "துஆ"க்களின் வாயிலாக கேட்டு விட்டு உலக அலுவல்களில் ஈடுபட வேண்டும் என்பது நபி(ஸல்)அவர்கள் வகுத்தவைகளில் ஒன்று.
ஹழ்ரத் அபூதுஜானா(ரலி) அவர்கள் இதற்கு மாற்றமாக பஜ்ர் தொழுதவுடன் தமது வீட்டிற்கு சென்று விடுவார்கள்.இதைக் கவனித்து வந்த நபி(ஸல்)அவர்கள் அபூதுஜானவை அழைத்து "உமக்கு இறைவனின் எந்தத் தேவையும் இல்லையா?என்று கேட்பார்கள்.
 அதற்கவர் "யாரசூலல்லாஹ் இறைவனிடம் எனக்கு நிரம்ப தேவைகள் இருக்கிறது"என்றார்.அப்படியானால் உமது தேவைகளை இறைவனிடமிருந்து கேட்டுவிட்டு போகாமல்,தொழுதவுடன் வீட்டிற்கு சென்று விடுகிறீரே!என்று நபியவர்கள் கேட்டார்கள்.
அதற்கு அபூதுஜானா (ரலி)அவர்கள் கூறினார்கள்:
"யாரசூலல்லாஹ் ! என்னுடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பேரீத்த மரம் நிற்கிறது.அந்த மரத்தின் கிளைகள் என் வீட்டு முற்றத்தில் படர்ந்து நிர்ப்பதால்,அதன் பழங்கள் என் வீட்டில் உதிர்ந்து விடுகிறது.அவைகளை என்னுடைய பிள்ளைகள் எடுத்து புசித்து விடுகிறார்கள்.அது அன்னியன் உடமை,அவைகளை என் குழைந்தைகள் தின்று விடுவதால் ஹராமான (விலக்கப்பட்ட)பொருளை உண்டவர்களாகி விடுகிறார்கள்.ஆதலால் நான் தொழுதவுடன் வீட்டிற்க்குச் சென்று என் பிள்ளைகள் கண் விழிப்பதற்கு முன் அப்பழங்களை எடுத்து அவர் வீட்டில் போட வேண்டியதாயிருக்கிறது:அதனால்தான் நான் ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன் வீட்டிற்குச் சென்று விடுகிறேன்.என்றார்கள்.
ஹழ்ரத் அபூதுஜானா(ரலி)அவர்களின் நேர்மையையும்,பேணுதலையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் இதற்கொரு சரியான பரிகாரம் காண முயற்சித்தார்கள்.அந்த மரம் இருந்ததோ ஒரு "முனாபிக்"(முஸ்லிமை போல் நடிக்கக்கூடியவர்)வுடைய வீட்டில்.இறுதியில் அந்த மரத்தை அபூதுஜானாவுக்கே சொந்தப் படுத்திக் கொடுத்துவிட முடிவு செய்யப்பட்டது.
நபி (ஸல்)அவர்கள் ஒரு ஸஹாபியை மரச் சொந்தக்காரரிடம் அனுப்பி,அடுத்த வீட்டுக்காரார் அபுதுஜானாவுக்கு மரத்தை விற்றுவிடும்படி சொல்லுங்கள் என அனுப்பினார்கள்.அதற்கு அந்த முனாபிக் முடியாது என்று சொல்லிவிட்டார்.இரண்டாவது தடவை நபியவர்கள் தங்களுக்கே விலைக்கு தரும்படி கேட்டனுப்பினார்கள்.அதற்கும் அந்த முனாபிக் முடியாது என சொல்லிவிட்டார்.மூன்றாவது தடவையாக சுவர்க்கத்தின் ஒரு மரத்திற்கு பகரமாக தரும்படி கேட்டனுப்பினார்கள்.அதற்கும் முடியாது என்றே பதில் வந்தது.கடைசியாக மதினாவில் பத்துக்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்ட ஒரு தோட்டத்திற்கு பகரமாக அவர் வீட்டு முற்றத்தில் நிற்கக்கூடிய அந்த ஒரு மரத்தை மட்டும் தரும்படி கேட்டனுப்பினார்கள்.
  பேராசைக்கொண்ட அந்த முனாபிக் "ஒரு மரத்திற்குப் பதில் பத்து மரங்கள் கிடைக்கிறது.இந்த ஒரு மரமும் நமது வீட்டில்தான் நிற்கிறது.எனவே இரவோடு இரவாக வீட்டிலுள்ள மரத்தின் கனிகளையும் நாமே பரித்துகொள்ளலாம்.வெளியுலுள்ள மரங்களின் கனிகளும் நமக்கு கிடைக்கும்".என்று தம் மனதிற்குள் நினைத்தபடி நபியவர்களின் கடைசி கோரிக்கைக்கு இணங்கினார்.ஒப்பந்தப்படி தம் வீட்டு முற்றத்திலுள்ள மரத்தை அபூதுஜனாவுக்கே விற்று விட்டார்.அடுத்த நாள் காலையில் மரம் அபூதுஜானவுடைய வீட்டு முற்றத்தில் நிற்பதைக் கண்டு முனாபிக் திடுக்கிட்டார்.
(நூல்:தப்ஸீருல் பஹவி)  இச்சம்பவத்தில்,ஒரு தந்தை தன் பிள்ளைகளுடைய வளர்ப்பில் ஹலால் எது?ஹராம் எது?என்று சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்தார்கள் என்று தெரிய வருகிறது.]
ஹராம் ஆக்கப்பட்டவைகளில் நான்காவதாக, அல்லாஹ் அல்லாதவைகள் பெயரால் அறுக்கப்பட்ட மற்றும் அல்லாஹ் அல்லாதவருக்காக அறுக்கப்பட்ட மாமிசங்களை உண்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
மற்ற உயிரினங்களை அறுத்தே உண்ண வேண்டும். ஆனால் மீன்களை அறுக்கத் தேவை இல்லை. செத்த மீன்களையும் உண்ணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 'அது (கடல் நீர்) தூய்மையானது. அதன் இறந்தவை ஆகுமானவை' என்று நபிமொழி. 
மீன் அல்லாத உயிரினங்களை அவசியம் அறுத்தே உண்ண வேண்டும். ஆனால் மீனை அறுக்காமல் உண்ணலாம். இதற்குக் காரணம் நீர் வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற ரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இருந்து சிறிதளவு ரத்தம் கசியுமே தவிர ரத்தம் வடியாது; ரத்தம் பீறிட்டு ஓடாது. இதனால்தான் மீனை உயிரோடு அறுக்காமலும் உண்ணலாம் என்று இஸ்லாம் அனுமதித்துள்ளது.

நன்றி-பாத்திமா மைந்தன்
    

Saturday 18 June 2016

அறிவோம் இஸ்லாம்


கை கழுவும் தினம்
கை கழுவுவது குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி அக்டோபர் 15-ந் தேதி 'உலக கை கழுவும் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் காலையில் எழுந்ததும், கையைக் கழுவ வேண்டும் என்பதையே ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய முதல் செயலாக இஸ்லாம் கற்றுத் தருகிறது. 
'உங்களில் ஒருவர் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து பாத்திரத்திற்குள் கையை விடுவதற்கு முன்பு தன் இரு கைகளையும் மூன்று முறை நன்றாகக் கழுவிக் கொள்ளட்டும். ஏனெனில் இரவில் அயர்ந்த தூக்கத்தில் நமது கைகள் எந்த நிலையில் இருந்தது என்று நமக்குத் தெரியாது' என்பது நபிகளாரின் கூற்று. 
ஒவ்வொரு நாளும் கை கழுவிய பின்னரே அன்றைய வாழ்க்கை நடைமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை 1,400 ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் சொல்லித் தந்துள்ளது. இரு கைகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை உலக கை கழுவும் தினம் நமக்கு வலியுறுத்துகிறது.  முகம், பல், காது, கால்கள், மூக்கின் துவாரம் உள்ளிட்ட உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் தூய்மையாக வைத்திருத்தலை 'ஒளு' (அங்கத் தூய்மை) கற்றுத் தருகிறது.
சிறுநீர் கழிப்பதில்கூட சிறந்த முறைகளைச் சொல்லித் தருகிறது, இஸ்லாம்.
சிறுநீர்த் துளிகள் தெறித்து விடாதபடி மிருதுவான தரையில் சிறுநீர் கழிக்க வேண்டும். எப்போதும் அமர்ந்து தான் சிறுநீர் கழிக்க வேண்டும். நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது மிகவும் மோசமான நடைமுறையாகும். அதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
குளியல் அறை மண் தரையாக இருக்கும் பட்சத்தில் அதில் சிறுநீர் கழிப்பதைத் தவிர்த்துக் கொள்வது  நல்லது.
மலஜலம் கழிக்கச் செல்லும்போது கண்டிப்பாக காலணி களை அணிந்து செல்ல வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'சாபத்திற்குரிய மூன்று செயல்களில் இருந்து விலகி இருங்கள். அவையாவன: நதிக்கரைகளிலும், சாலைகளிலும், நிழல் தரும் இடங்களிலும் மலஜலம் கழித்தல்'. 
மேலும் தேங்கும் தண்ணீர், ஓடும் தண்ணீர் போன்றவற்றில் சிறுநீர் கழிக்கக்கூடாது.
'உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்க நினைத்தால் அதற்குத் தகுந்த இடத்தைத் தேர்வு செய்து கொள்ளட்டும்' என்பது நபிமொழியாகும்.
சிறுநீர் கழிக்கும்போது அது தனது உடலிலோ, உடையிலோ விழாதவாறு கழிக்க வேண்டும். 
ஹங்கேரியில் ஒரு யூதக்குடும்பத்தில் பிறந்து 1972-ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட லியோ பால்டு அஸத் என்பவர் தன்னை இஸ்லாம் ஆட்கொண்ட விதத்தைப் பற்றிக் கூறியதாவது:-
'முஸ்லிம்கள் சிறுநீர் கழிக்கும் முறையும், அதன் பிறகு துப்புரவு செய்யும் பாங்குமே என்னை முதலில் கவர்ந்தன. மற்றவர்கள் மிகவும் அலட்சியமாகக் கழித்து விட்டு மிகச்சாதாரணமாக எழுந்து செல்லும் இந்தக் காரியத்தைக்கூட முஸ்லிம்கள் பேணுதலுடனும், ஒரு மரியாதையுடனுமே செய்து முடிக்கிறார்கள். இதன் பிறகு, நான் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ள மேலும் மேலும் படித்தேன். படிக்கப் படிக்க அதன் ஒவ்வொரு படியும் என்னை அதை முன்னோக்கி நகர்த்திக் கொண்டு சென்றது. நான் முஸ்லிம் ஆகி விட்டேன்'.
அங்கத் தூய்மையை முறிக்கின்ற தூய்மைக் கேடான சில இயற்கை உபாதைகள் உண்டு. சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், நாற்ற வாயு பிரிதல் ஆகியவைதான். இவற்றுக்கு 'சிறு துடக்கு' என்று பெயர். 'சிறு துடக்கு' ஏற்பட்டால் மீண்டும் 'ஒளு' செய்ய வேண்டும். ஆனால் தாம்பத்திய உறவு மற்றும் விந்து வெளியாதல் போன்றவற்றைப் 'பெருந்துடக்கு' என்பர். இதற்கு குளிப்பு கடமை ஆகிறது. குளிப்பு என்று சொன்னால் உடல் முழுவதும் தண்ணீரால் தூய்மை செய்வது என்று அர்த்தம்.
'(நபியே!) மாதவிடாய் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். அது ஓர் இயற்கை உபாதை. எனவே மாதவிடாயின்போது (தாம்பத்திய உறவு கொள்ளாமல்) பெண்களிடம் இருந்து விலகி இருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள். அவர்கள் தூய்மை அடைந்து விட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அவர்களிடம் செல்லுங்கள்' என்று திருமறையில் (2:222) இறைவன் கூறுகின்றான்.
'தூய்மையாகும் வரை' என்றால் குளிக்கும் வரை என்று பொருள். 'நீங்கள் பெருந்துடக்கு உடையவர்களாய் இருக்கும் நிலையில், குளிக்கின்ற வரை தொழுகையை நெருங்காதீர்கள்' (4:43) என்கிறது, இறை வசனம்.
மாதவிடாய் என்பதைக் குறிக்க மூலத்தில் 'அல்ஹைள்' என்னும் சொல் ஆளப்பட்டுள்ளது. இஸ்லாமிய வழக்கில் 'ஹைள்' என்பது, பெண் பருவ வயதை அடைந்த பிறகு கருப்பையில் இருந்து மாதந்தோறும் குறித்த நாட்களில் வெளியேறும் குருதியைக் குறிக்கும். சிறுநீரகத்தில் இருந்து சிறுநீரும், குடலில் இருந்து மலமும் வெளியேறுவதைப் போன்று, கருப்பையில் இருந்து வெளியேறும் ஒரு கழிவே மாதவிடாய் குருதி ஆகும். கருப்பையின் ஆரோக்கியத்திற்கு இது மிகவும் அவசியமான ஒன்றாகும்.
மாதவிடாய் மற்றும் பிரசவ ரத்தம் வந்தவர்கள் நோன்பு நோற்கவும், தொழுகையில் ஈடுபடவும் கூடாது. ஆனால் தூய்மையான பிறகு, விட்டுப் போன நோன்புகளை நோற்பது கட்டாய கடமையாகும். அதே நேரத்தில் விட்டுப் போன தொழுகைகளை மீண்டும் தொழுவது கட்டாயமில்லை.
ஒருமுறை நபிகளார் பள்ளிவாசலில் இருந்த தொழுகை விரிப்பை எடுத்துத் தருமாறு ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினார்கள். 
அதற்கு ஆயிஷா, 'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே' என்றார்கள். அப்போது நபிகளார், 'மாதவிடாய் உன் கையில் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை' என்று பதில் அளித்தார்கள். 
மாதவிடாய் உள்ள ஒரு பெண் ஒரு பொருளைத் தொடுவதால் அது அசுத்தமாகி விடும் என்ற மூட நம்பிக்கை இஸ்லாத்தில் இல்லை. தீட்டு, தீண்டாமை ஆகியவை இஸ்லாத்திற்கு எதிரான சிந்தனைகளாகும்.

நன்றி:பாத்திமா மைந்தன்